Tuesday, November 25, 2014

கொள்ளைச்சிரிப்பு

2014-07-08_09-38-36_208.jpg



கொள்ளைச்சிரிப்பு
==================================================ருத்ரா


வெள்ளைச்சிரிப்பா?
கொள்ளைச்சிரிப்பா?
அன்றொரு நாள் நான்
சிறைப்பட்டுப்போனேன்.
மறுபடியும்
அதற்கு
உன் காதலின்
ஏழு மலை ஏழு கடல் எல்லாம் தாண்டி
"மாங்கல்யம் தந்துநானே" எனும்
தீவுக்குள் வந்து தேடுகின்றேன்.
உப்பு புளி மிளகாய்களின்
அஞ்சறைப்பெட்டிக்குள்ளா
வைத்திருந்தாய்?
தெரியவில்லை!
மழலை நந்தவனத்துள்
அது புதைந்தே போனது.
எத்தனை பாம்புகள்?
எத்தனை சட்டைகள் உரித்தன?
இன்னும்
நான் அதைப்பார்க்க வில்லையே.
வெள்ளிவிழுதுகள்
மண்டிய வயதுகளின்
ஆரண்யத்திலும் தேடுகின்றேன்.
எங்கு
அதை புதையல் ஆக்கினாய்?
அந்த உயிர் சுருட்டும் போதை
புகை நெளிவாய்
என்னை
பொல்லாத பாடு படுத்துகிறது?
எப்போது நான்
அதை பார்ப்பது?
வாக்கிங் என்ற புதிய பரிமாணத்தில்
தினம் தினம்
பூங்காற்றின் முகம் வருடித் தேடுகிறேன்.
மைல் கணக்கு பார்த்து
நான் நடந்ததின் நீளத்தை அடுக்கினால்
அந்த நிலாவுக்கே
முத்தம் கொடுத்துவிட்டு
இந்நேரம் திரும்பியிருக்கலாம்..
அதோ
அங்கே தெரிகிறதே.
சட்...
"என்னா பெரிசு ..பாத்துப்போ"
அவன் அடித்துப்போட்டுவிட்டு
பைக்கில் விரைந்து விட்டான்.
தடுமாறி விழுந்து
கல்லில் அடிபட்டு...
ஆகா! இனிமை !இனிமை!
பார்த்துவிட்டேன்....ரத்தம் வழிய ...
அந்த பூக்களின் மீது விழுந்து கிடக்கிறேன்.
அந்த வெள்ளைச்சிரிப்பு இங்கேயா இருக்கிறது!
ஆனாலும் சிவப்பாய் சிரிக்கிறதே..
சாலையோரத்தில் எனக்கு விழுந்தது
முற்றுப்புள்ளியா? வியத்தல் குறியா?
கால சமுத்திரத்தின்
அடி ஆழத்தில் நான்..

"ஸ்கல் இஞ்சுரி..ஒன்றும் சொல்ல முடியாது"
டாக்டர் ஸ்டெத்தை சுருட்டி
பைக்குள் திணித்தார்.
கேவல்களின் காட்டுக்குள் நீ!
எப்போது  உன் முகத்தில்
நான்
அந்த வெள்ளைப்பூக்களை பார்ப்பது?

========================================================