Friday, January 29, 2016

காதல் போயின்.... காதல் போயின் ....



காதல் போயின்.... காதல் போயின் ....
============================================ருத்ரா இ.பரமசிவன்

நாளும் மடி மேல் இருக்கும்
நல்ல பாம்பே
இந்த நல்ல பெயர் வைத்தது யார்
சொல்லு பாம்பே.
தீண்டியது நீ அல்ல
நாங்கள் தான்.
சீண்டியதும் நீ அல்ல
நாங்களே தான்.
"பூலியன்" புதிர் கணிதம்
எண்களிலே
அதை
மின் கணிதம் ஆக்கி
மிகைப்படுத்தி
நுண்மை உலகம் புகுந்து விட்டோம்.
உன் துடிப்புகள் உள்ளே
துடிப்பு வைத்து
சுரங்கம் வெட்டி
குகை செய்தோம்.
வழி எங்கே ? வாசல் எங்கே ?
ஒளி ஒன்றும் தெரிய வில்லை.
அறிவுக்கடல் அத்தனைக்கும்
ஒரு மின் சொட்டு போதும் என்றாய்.
ஒரு "ஷேக்ஸ்பியரையோ"
ஒரு "கபிலனையோ"
ஒரு  "ஐன்ஸ்டீனையோ "
ஒரு "சர்.சி.வி.ராமனையோ "
கருப்பைக்குள் கொண்டு வர
பில்லியன் பில்லியன் கருப்பைகள்
தேடி தேடி சலித்திட்டோம்.
கலை வாணியும் விட்டெறிந்தாள்
கட்டை வீணை வேண்டாம் என்று.
ஓட்டைக்கூரை  என்றாலும்
பள்ளிகள் தோறும் பள்ளிகள் தோறும்
மடிக்கணினிகள் மழைகள் தான்.
கல்வியின் மூச்சுக்காற்றினிலும்
காசுகள் மட்டுமே உயிராச்சு.
இளசுகள் காதுகள் வாய்கள் எல்லாம்
டிஜிடல் உணவே காதல் செய்யும்.
மைவிழிகள்  குறு குறுக்கும்
மரகதக்காட்சிகள்
மலடு தட்டி
மண்ணில் சரிந்து கிடக்கின்றோம்.
"காதல் போயின்
காதல் போயின்
சாதல் சாதல் சாதல்."
பாரதியும் இதைத்தான்
பாடிச்சென்றானோ ?

==============================================




தாமிரபரணி



தாமிரபரணி
=========================================== ருத்ரா இ.பரமசிவன்

தாமிர பரணி என்றால்
நெஞ்சமெல்லம்
நெக்குருகும்.
அந்த பளிங்குப்பாய் விரிப்பில்
குளிக்கிறேன் என்ற பெயரில்
புரளும்போது
கல்லிடைக்குறிச்சி என் மனதோடு
என் அடிஉள்ளத்தில்
அச்சடிக்கப்பட்டுவிடுவதை
உணர்கிறேன்.
எதிர்க்கரையில்
தூரத்து
"ஊர்க்காடு சாத்தாங்கோயில் சிலை"
நிமிர்ந்து மீசை முறுக்கி
முண்டைக்கண் துருத்துவது கூட‌
இந்த தண்ணீருக்குள்
குமிழியிட்டது.
நீர்க்காக்கைகள் போல
தலை நீட்டி
தலை நீட்டி
அந்த நீல வானத்தையும்
அதனோடு தழுவிக்கிடக்கும்
அந்த மருத மரங்களையும்
பார்க்கும் போது
நம்மையும் சேர்த்து
யாரோ ஒரு ரவி வர்மா
ஓவியம் தீட்டுவது போல் இருக்கும்.
அவன் புருசுகள்
என் மூக்கு நுனியில்
கிச்சு கிச்சு மூட்டும்.
இந்த தாமிர பரணிக்குள்
எத்தனை கலிங்கத்துப்பரணிகள்?
பருங்கண் நண்டு கெழுத்தி மீனை
கொடுக்கு கொண்டு தாக்கும்.
கட்டம் கட்டமாய் சட்டை போட்ட‌
ஒரு தண்ணீர்ப்பாம்பு
அங்கு விழுங்க வரும்.
சற்று தூரத்திலேயே
நீலமும் சிவப்புமாய்
ஒரு மீன் கொத்தி
விருக்கென்று நீருக்குள் விழுந்து
சரக்கென்று பறக்கும்
வாயில் துடிக்கும் மீனோடு.
நான் அந்த ஊமை மருதமரங்களை
உற்று உற்று பார்ப்பதுண்டு.
அதன் கிளை இலை பின்னலில்
ஒரு முகம் தோன்றுவதுண்டு.
தாமிரபரணி ஆற்றில் குளிக்கும் போதெல்லம்
அதை நான் பார்த்திருக்கிறேன்.
இதே ஆறு
சிந்து பூந்துறையில்
வைரப்படுகையாய்
வலம் வரும்போது
அந்த மாபெரும் எழுத்தாளன்
புதுமைப்பித்தனுக்கு
பேனாவும் பேப்பருமாய்
எடுத்துக்கொடுத்திருக்கிறது.
கயிற்றரவு என்ற கதையில்
வாழ்க்கையும் மரணமும்
கயிரும் பாம்புமாய்
தோன்றி தோன்றி அலைக்கழித்ததை
அந்த பனங்குட்டிகளின்
பின் புலத்தில்
தரிசித்ததை எழுதியிருக்கிறான்.
இந்த மருதமரங்களும்
ரவி வர்மாவின் வர்ணக்குழம்பில்
அந்திச்சிவப்பை பூசிக்கொள்கிறது.
காலைப்பருதியில் மஞ்சள் பூசிக்கொள்கிறது.
அந்த முகம் மட்டும்
புதிராய் தோன்றுகிறது.
உச்சியில் நாரைகள் அலங்கரிக்க‌
ஒரு மூடு திரையில்
நெளியல் உருவமாய்
தாமிர பரணிக்குள் பிம்பம் காட்டி
அந்த பிம்பபிழம்பில்
எல்லாவற்றையும் பிசைந்து
ஒரு மாயப்பிரபஞ்சம் காட்டுகிறது!

========================================================

குவியல்




குவியல்
                                          ========================ருத்ரா இ.பரமசிவன் 

இருளைத் தின்றது தீயா?
தீயைத் தின்றது இருளா?
கேள்விகள் தான் எரிகின்றன.
மெழுகுவர்த்தியின் 
வெள்ளை லாவாவில் 
இருளின்  உறை பிணம் .
ஒளியின் உறைவிடம்.
சிந்தனைக்குழம்பில் 
ஒரு சிற்றில் விளையாட்டு.
இன்னும் இன்னும்... 
விடைகள் 
எங்கோ ஆழத்தில் !
சுரங்கம் வெட்டி வெட்டி
மண் குவித்துப்போட்டதில்
இமயமலைகள் கூட‌
சிறு கடுகு ஆனது.
ஞானம் அவ்வளவா 
நான் பெற்றேன்?
என்று இறுமாந்தேன்.
மண்குவியல்
என்னை 
எள்ளி நகைத்தது.
"இவ்வளவும்
உன் அஞ்ஞானம்."
என்றது.
===========================================