Sunday, December 27, 2015

மாதங்களில் நான் மார்கழி!




மாதங்களில் நான் மார்கழி!
=========================================================ருத்ரா

மாதங்களில் நான் மார்கழி.
ஏனெனில்
அந்த நாற்றமெடுத்த‌
பாம்புப்படுக்கையை விட‌
சூரியனின் இந்த‌
ஏழுவர்ண பளிங்கு விந்து எனும்
பனித்துளிக்குள்
படுக்கை விரித்துக்கொண்டே
படைப்புக்கு ரிமோட் தட்டுவேன்
என் தொப்பூள் கொடியில்.
வடிவ கணிதம் எனும்
ஜியாமெட்ரியில்
குறுக்குக்கோடும்
நெடுக்குக்கோடுமே
இறைவர்கள்.
வாழ்க்கையின் வடிவ கணிதமும்
நின்றவண்ணமும்
கிடந்த வண்ணமுமாகவே
நிகழ்வுகளை நகர்த்துகின்றன.
படுக்க இடம் கிடைக்காமல்
சிவனின் திருநீற்றுக்கோட்டில் கூட‌
நான் கிடந்திருக்கிறேன்.
அவன் சூலத்திலும்
நின்று விறைத்திருக்கிறேன்.
இந்த‌
ரெண்டும் ரெண்டும் நாலு
என்ற உண்மையைக்கூட‌
நான்கு மறைக்குள்
நீங்கள் பதுக்கிக்கொள்ள வேண்டுமா?
மார்கழியின்
மரகதப் புல்நுனியில்
ஊரும் சிறு பூச்சி
அதையும் விட சிறு பூச்சியை
தீனியாக்க விரைகிறது.
இயற்கையில்
ஒரு மரணத்தின் வாயில்
இன்னொரு மரணம் அமர்ந்திருக்கிறது
ஜனனமாக.
இதை நீள நீளமாய்க் கட்டியிருந்த‌
மூங்கில் வேலிக்குள் முடங்கி
மரவட்டையாய்
நகர்ந்து நகர்ந்து
என்னைத் தரிசிப்பவர்களே!
உங்கள்
மூளைக்கபாலம்
த‌ன்
நுண்ணிய நியூரோன் முடிச்சுகளின்
அந்த‌
"பர்கிஞ்சே செல்களின்"
வாசல்களை திறக்கச்செய்யுங்கள்.
நீங்கள் தரிசித்ததை
எனக்கும் சொல்லுங்கள்.
எனவே
மார்கழி என் பள்ளிக்கூடம்.
பாடம் நடத்துங்கள்.
என் ஞானக்குளியல்
உங்கள் கேள்விகளிடம் தான்.
பாடங்கள்
சந்தியாவந்தனத்துடன்
மனப்பாடம் செய்யப்படுவதற்கானவை அல்ல.
பாடங்கள்
படிக்கப்பட வேண்டியவை.
அறியப்பட வேண்டியவை..
"மறை'க்கப்படவேண்டியவை அல்ல.
அறியப்படுவதற்காக
அப்புத்தகங்கள் திறக்கப்படுவதே
உங்கள் சொர்க்க வாசல்.



=================================================================







ஓங்கி உலகளந்த....




ஓங்கி உலகளந்த....
=======================================ருத்ரா

ஓங்கி உலகளந்து
மூன்றாவது அடியை
மாவலியின் தலையில் வைத்து
அமிழ்த்திய‌
நெடுமாறனை
உள்ளே உணர்ந்து மகிழ்ந்து கலந்து
பாடியிருக்கிறார்
அருள் மிகு ஆண்டாள்.
அவரது இனிய தமிழ்
எல்லாவற்றையும் மறக்கடித்துவிடும்
எழுத்துப்போதை தான்.
அதில் ஊறிக்கிடக்கும்
பக்திப்போதையை எல்லாம்
தெளியவிட்டு சிந்தித்தால்
நமக்கு ஒரு கேள்வி பிறக்கிறது.
மாவலி ஒரு சிறந்த மக்கள் ஆட்சியாளன் என்று
மலையாளத்தில் இன்றும்
மலர்க்கோலங்கள் இட்டு
அவனைக்கொண்டாடுகிறார்கள்.
இறைவன்
அடே மாவலி
நீ என்னை (விஷ்ணுவை) விட்டு
சிவனை ஏன் போற்றுகிறாய்
என்று நேரிடையாக கேட்டிருக்கலாம்.
அதை விட்டு
கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும்
அவன் பலவீனத்தைப்பயன்படுத்தி
இரண்டடி நிலம் வரைக்கும்
குள்ள அந்தணர் வேடத்தில்
தாழங்குடை பிடித்து நின்றவர்
மூன்றாவது அடியில் விஸ்வரூபம் எடுத்து
அவனை அமிழ்த்திக்கொன்றதில்
என்ன நியாயம்?
எனவே
ஓங்கி உலகளந்து நின்றது
மாவலி தான்.
புராணங்களின் சப்பைக்காரணங்கள் எல்லாம்
தள்ளுபடி செய்யப்பட வேண்டியவை!
இதுவும் கூட‌
ஒரு மார்கழி சிந்தனை தான்.

====================================================