Monday, September 21, 2015
கைத்தடி
முட்கள்
முட்கள்
===================================================================
ருத்ரா.இ.பரமசிவன்
முண்டைக்கண் எண்கள் துருத்திய
கடிகார வட்டத்தில்
அது என்னை
குத்தி குத்திப்புண்ணாக்கியது.
ஓரப்பார்வை பார்த்து பார்த்து
காக்கை தன் கூரிய அலகுகளால்
கொத்துவது போல்
என்னக்கிளறியது.
நான் ஒன்றும் காதலிக்காக
காத்திருக்கும் தவத்துக்காக
இப்படி கழுவேற்றப்படவில்லை.
கிரேக்கர்கள்
மணற் கடிகையை
கவிழ்த்து கவிழ்த்து வைத்துப்பார்த்து
எத்தனை சாம்ராஜ்யங்களை
மண்ணுக்குள் புதைத்திருப்பார்கள்.
நான்
குத்தொக்க குத்துக்கு சீர்த்தவிடத்தை
எதிர்பார்த்துக் காத்திருக்கும்
கொக்கும் அல்ல.
2 நிமிடம் 41 வினாடிகள்
எனும் நீண்ட அனக்கொண்டா பாம்பு
என்னை விழுங்கி
என் கழுத்து வரை வந்து விட்டது.
அப்பப்ப!
எங்கே போய்விட்டாள்
என் இல்லத்தரசி?
பால் பொங்கி கீழே கொட்டிவிடப்போகிறது!
ஜாக்கிரதை!
என்று போய்விட்டாள்.
இன்னும் வரவில்லை.
நானும் கடிகாரவட்டத்தைப்
பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்.
பால் கொதி வர
4 நிமிடம் ஆகுமாமே!
சப்பாத்திக்கள்ளியின்
அடர்ந்த முட்காட்டில் கிடக்கிறேன்.
காலத்தின் கூரிய முட்களையா
தினம் தினம்
என் அன்புக்குரியவள் தாங்குகிறாள்!
ஐயோ ஐயோ..
அதற்குள் நுரை பொங்கி..
ஸ்டவ் எல்லாம் வழிந்து...
அந்த விநாடி முள்ளில் நான்
நார் நாராய் தொங்கிக்கிடக்கிறேன்.
====================================================
பீட்ஸா
பீட்ஸா
==============================================ருத்ரா இ.பரமசிவன்.
எவ்வளவு நேரம் நின்றேன்
இந்த ஒளி மரத்தின் அடியில்?
தெரியவில்லை.
எப்படியும் வருவேன்
என்று சொல்லியிருக்கிறாள்.
பெல்பெப்பர் டொமோடோ ஆலிவ்
டாப்பில்
மணமணக்க அந்த பீட்ஸாவை
ஒரே தட்டில்
இருவரும் ஒரே கடியில்
பாலாடை நூல் இழுத்து
வாய்சுவைக்கும் கற்பனயில்
நேரம் நீட்டித்தது பற்றி
கவலையில்லாமல்
விளக்குக்கம்பத்து
அந்த கூட்டல் குறியில்
கசிகின்ற பால் ஒளியில்
நின்றிருந்தேன்.
சங்கத்தமிழ் பாடல் வரி ஒன்றில்
திளைத்திருந்தேன்.
பாலைவனத்தில்
துளியுண்டு கிடக்கும் நீரை
ஆண் மானும் பெண் மானும்
அது குடிகட்டும் என்று இதுவும்
இது குடிக்கட்டும் என்று அதுவும்
"கள்ளத்தில் ஊச்சும்" காட்சிதான் விரிந்தது.
தண்ணீர் அப்படியே இருந்தது
அவற்றின் கானல் நீர்த்தாகமோ
தீர்ந்து போயிருந்தது.
என் கற்பனை சடக்கென்று நின்றது.
அவள் திடீரென்று காரில்
அவன் முன் வந்தாள்.
ஹேய்! இவர் என் டீம் மேனேஜர்.
பீட்ஸா ஹௌஸ் டின்னருக்கு
கம்பெனியாக என்னை அழைத்தார்.
உனக்கு தகவல் தர முடியவில்லை.
நாங்கள் சாப்பிட்டு விட்டோம்.
உனக்கும் ஒரு பாக்ஸ் வாங்கியிருக்கிறோம்.
ம்ம் ஏறு.ரூமில் சாப்பிடலாம்.
நானும் ம்ம் என்று முனகி
காரில் அழுந்திக்கொண்டேன்.
அவர் ஹாய் என்றார்.
நானும் தான்.
அவர் கார் ஓட்டினார்.
அவர் அப்பார்ட்மென்ட வரைக்கும்
ஓட்டிக்கொண்டு வந்தார்.
அவர் முகத்தைக் கவனித்தேன்.
ஒரு கடுவாய் ஒரு முயல்குட்டியை
குத்திக்கிழித்து முழுங்கிய பிறகும்
வாய்க்கடையில்
முயலின் பிஞ்சு குடல் இழைகள்
பிசிறு தட்டி இருக்குமே
அப்படி இருந்தது.
பீட்சாவை அந்தப்பாடா படுத்தியிருப்பார்?
இறுகிய முகத்துடன் ஆனால்
இனிய குரலில் "பை"
சொல்லிவிட்டு அவர் ரூமுக்குப்போனார்.
அங்கே நிறுத்தியிருந்த
எங்கள் காரில் எங்கள் ரூமுக்கு
அந்த பீட்ஸா பாக்ஸுடன்
வந்து சேர்ந்தோம்.
அதே பெல் பெப்பர் டொமொட்டோ ஆலிவ்
டாப்பில் பீட்ஸா ஆவி பறக்க
எங்கள் சாப்பாட்டுக்கு தயார் ஆனது.
பீட்ஸாவை
ஒரே கடியில் ஒரே வாயில்
பாலாடை பிசினை இழுத்து இழுத்து
சாப்பிட்டோம்.
இல்லை.இல்லை
"கள்ளத்தில் ஊச்சும்" மான்களைப்போல
அந்த வெள்ளை நூல்களை
இழுத்து இழுத்து சுவைப்பதாக
"கள்ளத்தில் ஊச்சினோம்"
பசியில்லாமலேயே பசித்தது போல
அவள் புசித்தாள்.
பசியிருந்தும் பசியில்லாமல்
நான் புசித்தேன்.
===========================================================
Subscribe to:
Posts (Atom)