Sunday, July 17, 2016

சட்டைகள்




சட்டைகள்
===================================================ருத்ரா

காலப்பரிமாணங்களுக்கு
ஒரு சட்டை தேவைப்பட்டது.
பூவேலைத்தையல்களின்
ஊசிக்கோர்த்தல்களை
கனவு இழைகளாக்கி
என் ரத்த நாளங்களோடு
சேர்த்துக்கொண்டு
மனிதனாய்
இந்த பூமியில் இறங்கினேன்.
தையல் எந்திரம்
கட கடத்துக்கொண்டு  தான்
இருக்கிறது.
காலம் எதைத் தேடுகிறது ?
அதன் கால்தடங்களில்
மனிதக்கபாலங்கள்.
அதற்கு முன்னும்
அடர்ந்த காடுகள் போல்
எலும்புமிச்சங்களை
சிதறடித்து விட்டுப்போன
டி  ரெக்ஸ் டைனோசார்கள்.
மலை போல் தின்று
மலை போல் சாணம் இட்டு விட்டு
காணாமல் போய்விட்ட
பிரம்மாண்ட சதைக்கூடுகள்
விட்டுசென்ற சாசனங்கள்
நம் பொருளாதாரமாய்
நம் முதுகின் மீது...
ஒரு முதலாளியின் கனவு
இந்த உலக உருண்டையை
லாபம் எனும்
கோலா உருண்டையாக்கி
அன்றாட இறைச்சியின்
ருசிக்குள் சுருட்டிக்கொள்வது !
ஓ!காலச் சட்டையே !
எதை நீ சட்டை செய்யப்போகிறாய்?
இவர்களின்
மதங்களுக்குள்.....
கடவுள்களுக்குள் ....
காதல்களுக்குள்....
மனிதத்தையே தின்று
மனிதத்தையே
மலஜலம்  கழித்துக்கொள்ளும்
மிருக வாடை கொண்ட
சட்டங்களுக்குள்
எதை நீ சட்டை செய்யப்போகிறாய்?
கேள்வியின் அடி தாங்காமல்
பாம்பைப்போல
சட்டையை உரித்துப்போட்டுவிட்டு
ஓடுகிறாய்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்!

========================================


ஒரு இனிய பூங்காலை!






ஒரு இனிய பூங்காலை!
===========================================ருத்ரா

எத்தனை எத்தனை கொட்டுகிறாய்?
காது வழியாய்
கண்கள் வழியாய்
உணர்ந்தது வழியாய்
ருசித்தது வழியாய்
புல்லரித்தது வழியாய்
எல்லாம் இங்கே தான் கொட்டுகிறாய்.
காலத்தின் எச்சில்
இங்கு தான் உமிழப்படுகிறது.
இந்த மூளைக்குப்பையில்
நீயும்
தேடுகிறாய் அந்த‌
மூளிப்ப்பொம்மையை.
முகம் மழுங்கி
கண்கள் இன்றி
உன் விளயாட்டுப்பொம்மையை!
அது பிணமா?
உயிர் உள்ளதா?
அது நிழலா? ஒளியா?
எல்லா நூற்றாண்டுகளையும் கொண்டு
பிசைந்து செய்தது தானே அது!
ஆம்!
அதைத்தேடிக்கொண்டே இருக்கிறாய்.
ஒரு நாள் அது
உன் கையில் கிடைத்தது.
ஐயோ!
என்ன இது!
சல்லடையாய் துளைத்து
வெறி நாய்கள் தின்றுக்குதறி போட்ட‌
எலும்பு மிச்சங்கள் போல்
அது அருவருப்பாய்..
சாதிகள் மதங்கள்
மூட நம்பிக்கைகளின்
முடை நாற்றமெடுத்த வர்ணங்கள்
அதன் மீது அப்பி..அழுகிய‌
உருவமாய்..அது!
அது என்ன?
அது யார்?
எல்லாமே நீ தான்!
மூக்கைப்பொத்தாதே
முகத்தைச்சுளிக்காதே
புதிய கபாலம் ஒன்று திற!
புதிய சிந்தனைகளை நிரப்பு.
அந்த நியூரான் நிமிண்டல்களுக்குள்
உன் தேடல்
புதிய "பால் வெளியை" நோக்கி இருக்கட்டும்.
பல்ஸார் குவாஸார் என்று
தொலைதூரங்களை
உன் முகத்தருகே கொண்டுவா!
மானிட நேயம் எனும்
அந்த நுண்ணோக்கியில்
உற்றுப்பார்த்து
புதிய சமுதாயத்தின்
டி.என்.ஏ ,ஆர்.என்.ஏ
உயிர்ச்சங்கிலியை பின்னிவைத்துப்பார்.
குப்பையை கிளறியது போதும்.
உட்பொருள் உணர்.
புதிய பார்வை ஒன்றை
உன்கண்களில் மாட்டிக்கொள்.
நம்பிக்கை பூச்செண்டுகளை
பரிமாறிக்கொள்ள புறப்படு.
உன் காலடிகளில்
பூமியின் இதயத்துடிப்புகள்
உணர்வதைப்பார்.
இதோ
ஒரு இனிய பூங்காலை!

====================================================