Tuesday, December 29, 2015

புத்தாண்டு பிறக்கட்டும்.




புத்தாண்டு  பிறக்கட்டும்.
=================================================ருத்ரா

புத்தாண்டு  என்றவுடன்
குளிர்ச்சியையும்
இனிப்பாகவும் தான் இருக்கிறது.
நம் மனக் குவளைகளில்
கனவுகள் நிரப்பி
காத்துக்கிடக்கின்றோம்.
காலண்டர் தாள் கிழித்ததில்
காயம்பட்டுக்கிடப்பது
காலம் அல்ல
நாமே தான்.
புத்தாண்டு பிறக்கட்டும்.
அதற்கு "நம்பர்கள்" தேவையில்லை.
ப்ரைம் நம்பர்களின்
"ஃ பெர்மெட் "கணித தேற்றம் போல்
நம் மூளியான கனவுகளைக்கொண்டே
கனல் மூளும்படி செய்வோம்.
மட்டைக்கு ரெண்டு கீத்து என்று
வாழ்க்கை
நமக்கு புரியவைத்தபோது
புரிதலின்
அந்த "நுனிக்கொம்பர் ஏறி அஃது இறந்து ஊக்கின் "
நம் தலையை இடிப்பது
அந்த "வெறும் வானமே."
சூரியன்
அந்த காற்றின் பாத்திரத்தில்
நீலத்தை ஈயம் பூசுகிறது.
பிஞ்சு வயதுகளில்
காதல் எனும்
மாணிக்கங்களைக்கொண்டு
அது பல்லாங்குழி ஆடுகிறது.
முற்றிய வயதுகளில்
சமுதாயம் என்ற உடலுக்குள்ளும்
அதன் இயக்கம் எனும் மூச்சுக்குள்ளும்
ஒரு ஆத்மாவை துருவி
தீப்பற்றசெய்கிறது.
சூடேறுகிறது.
வெளிச்சம் விரிகிறது.
மானிடம் என்றால்
வெறும்
வாய் மூக்கு கண் காது  தோல்
என்று
ஐந்து கொம்பும்
ஆயிரம் கோரைப்பல்லும் முளைத்த
டைனோஸாரிசம் அல்ல.
மனிதர்களை மனிதர்களே
நாசூக்காய்
அடித்துத் தின்னும்
பொருளாதாரத்தின்
"பொருளடக்கமும்" அல்ல.
மனித அறிவின் அசைவு
பிரபஞ்சங்களைப்  பந்தாடும்.
மனித உணர்வு
மனித அன்பின் பூங்கொத்துகளாய்
கிழக்கு தோறும் உதிக்கும்.
வெளிச்சம் பொது.
இருட்டு தான் தனிமை.
நடுநிசியில் ஊசிமுனையில்
ஒரு நேனோ செகண்டுக்கு
இந்த "உலகத்தை"
நிறுத்தி அல்ல
நிறுத்துப்பார்ப்போம் .
தராசுகள்
அடர்ந்த காட்டில் வீசி எறியப்பட்டிருக்கின்றன.
குத்தாட்டங்களில்
புத்தாண்டு முத்தங்களை
அந்த ஆப்பிள் கன்னங்களில்
விதைக்கும் முன்
உங்கள் பிடரியை உலுக்கி  விரட்டும்
அந்த புதிய யுகத்தின்
மின்னல் சுவையை
எப்படி
எப்போது
உணரப்போகிறீர்கள்..?

==========================================================