Wednesday, September 23, 2015

ஊமைச்சுருதிகள்





ஊமைச்சுருதிகள் 
==================================================================
ருத்ரா இ.பரமசிவன் 

இலங்கை 
என்றால் தென்னைகள் 
தென்னைகள் 
என்றால்  கீற்றுகள் .
கீற்றுகள் என்றால் இங்கே 
தமிழ் உயிர்களுக்கு மரண பந்தல் வேய்வதற்கா 
தலையாட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?
யாழ்நகரம்
தமிழனின் எலும்புக்கூடுகளால் நிரம்பிக்கிடக்கிறது 
என்பதன் 
கார்ட்டூன் சித்திரங்கள் தானே 
இந்த தென்னங்கீற்றுகள் !
ஓ !உலக மானிடர்களே 
மலட்டு வானமாய் நீலப்பின்னணி இங்கு 
ஒரு 
ஊமைச்சுருதி கூட்டிக்கொண்டிருந்தாலும் 
செங்குருவிகளின் 
ஒரு செங்கீதம் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறது 

விண்டது அண்டம்



விண்டது அண்டம்
====================================================
ருத்ரா இ.பரமசிவன்


மனசு மனசையே 
கொத்துக்கறி போடும்போது
இந்த பச்சையும்  நீலமும்
ஒத்தடம் கொடுப்பது எவ்வளவு சுகம்.
சினம்  எனும் 
எரிமலைகுழம்பையே
தினம் மடியில் கட்டிக்கொண்டு
என்னத்தைக்கண்டாய்?
பீச்சியடிக்கும்
வெள்ளிப்பளிங்கு நீர்ப்புகை
ஏதோ ஒரு மாயப்பறவையின்
தூவி கொண்டு வருடுவது போல்
அல்லவா இனிக்கிறது!
வயதுகள் கட்டும் கட்டங்களுக்குள்
மனிதனின் மகிழ்ச்சி
கூடு கட்டிக் கொள்கிறது.
அந்த விடலைப்பையனுக்கு
அவன் நண்பியின் சம்கின் துப்பட்டா
அந்த நீர்த்தூவி.
அந்த நீல முகடுகள்
ஒரு நடுவயதுக்காரனுக்கு
சௌகரியமாய் சாய்ந்து கொள்ளும்
பட்டுத்திண்டுகள்.
அந்த பச்சைக்கம்பள விரிப்பு
எப்போது பார்த்தாலும்
எப்படிப்பார்த்தாலும்
ஒரு தாயின் பாசம் கொழித்த மடி.
பிக்காஸோ 
தூரிகை எடுத்துக்கொண்டு
அவசரமாய் வருவார்!
என்ன ஆபாசம் இது?
ஊனக்கண் தாண்டி ஊறும் காட்சியை
யார் இப்படி
பச்சையாய் நீலமாய்
சாணி மெழுகியது?
எல்லாம் பூசி மெழுகி
இங்கும் அங்கும் 
கோடுகள் வளைவுகள்  தீற்றி
நம்மைக்கூர்ந்து தாக்கும்
ஒரு வண்ணம் அப்பித்தருவார்.
பூமிப்பெண் புருவம் வளைத்து
கன்னிமை சிதைய‌
அந்த நீலத்துணி விரிப்பில்
கன்னிக்குடம் உடைத்து 
பிரளயமாய் இந்த அண்டத்தையே
விண்டு தருவதை காட்டியிருப்பார்.
நாமும் 
வாய் பிளந்து நின்றிருப்போம்!

=========================================================