Wednesday, January 6, 2016

ஊர்கின்றோம்.


ஊர்கின்றோம்.
=================================================ருத்ரா இ.பரமசிவன்


கலிபோர்னியா
சான் ஓஸே யில் ஒரு பூங்கா .
கழுத்து நீண்ட கொக்குகளாய்
மெக்ஸிகோ பனைமரங்கள்.
ஒளிக்கண்கள் இரண்டு
உறுத்து விழிக்க
அந்தியின் கருநீலச்சித்திரம் .
எந்திரமாய் கசக்கிப்பிழிந்த பின்னும்
மிச்சமாய் தேறும்
தேன்  சொட்டுத்தருணங்களுக்கு
பூங்காவின் புல் விரிப்பு
தேடி வந்திருப்பவர்கள்.
"முட்புதர்கள் முட்புதர்கள் ..
நாம் வட்டமடித்துக் கொண்டிருக்கிறோம்
ஆம் வட்டமடித்துக்கொண்டிருக்கிறோம்
அதி காலை ஐந்து மணியிலிருந்தே"
டி .எஸ்.எலியட்டின்  கவிதை வரிகள்.
அந்த ஐந்து மணி அலாரத்திலிருந்தே
நம் அன்னையர்களின்
சொர்க்கவாசல் கதவு திறந்து
வழி அனுப்பி வைத்தது.
நரகங்களை நம்மில் பிரசவித்த நாம்
சொர்க்கத்து மர  நிழல் தேடி
அந்த கோணிய வாய் ஒட்டகங்களோடு
பாலைவனம் ஊர்கின்றோம்.

========================================