படம் நன்றி கூகிள் இமேஜஸ்
யானைமலை
===================================================================ருத்ரா இ.பரமசிவன்
மதுரையே இங்கு
கல்லாய் விறைத்து
உயரமாய்
படுத்திருப்பதை
பார்க்க கொள்ளை அழகு.
அந்த மத்தகம்
பரந்த ஒலிம்பிக் மைதானமாய்
கம்பீரமாய் காட்சி தரும்.
வெள்ளை வெயில்
தினமும் குளிப்பாட்டும்
சுகத்தில்
அந்த கருங்கல் கூட
கருப்பு வெல்வட்
சதைச்சுருக்கமாய்
தும்பிக்கை நீட்டிக்கிடக்கும்.
சென்னை போகும்
பேருந்துகள்
அதை உரசி உரசி
செல்லும்போது
அந்த கிச்சு கிச்சு மூட்டலில்
பொசுக்கென்று
அது எழுந்துவிடுமோ
என்றும்
ஒரு பயம் வருவதுண்டு.
இந்த ஆண்யானைக்கு
திருப்பரங்குன்றம்
மொக்கைக்கல் மலை
ஒரு பெண்யானையாய்
தெரிவதால்
கல்லின் ஏக்கமும் புரிகிறது.
மழைக்காலத்து
நீர் விழுதுகள்
கண்போல் தெரியும்
குழிகளிலிருந்து கசியும் போது
மதம் பிடித்து
அது பிளிறும்
ஊமைத்தனமான
டெசிபல்கள்
மதுரைக்காரர்களின்
மனத்தில் மட்டுமே
பதிவாகும்.
கல்யானைக்கு
கரும்பு ஊட்டிய படலம்
மதுரை மீனாட்சியம்மன்
கோயிலுக்குள் உண்டு.
அந்த கரும்புக்கும்
எச்சில் ஊறி
எழுந்துவிடும்
ஒரு பரபரப்பு கூட
அந்த கல் உடம்பில்
விடைப்பது போல்
எனக்கு தோன்றுவது உண்டு.
அன்பே சிவம்
என்று கோவிலுக்குள்
மணிஒலி கேட்டபோதும்
அன்பு தான் இன்ப ஊற்று
என்று ஒலித்தவர்களை
ஒழித்துக்கட்டும்
கழுமரங்களை
நட்டு வைத்த
ஆட்சியின் அடையாளங்கள்
இந்த கல்லில்
உறைந்து கிடக்கின்றன.
அந்த சமணர் சிற்பங்கள்
இந்த கல் தோலில்
இருப்பது தெரிந்தால்
அதை "தோலுரித்து"
வதம் செய்ய
மீண்டும் அந்த சிவன்
"ரௌத்திரம்" காட்டுவானோ?
மாடு கட்டி போர் அடித்தால்
மாளாது செந்நெல் என்று
யானை கட்டி போரடித்த
தென்மதுரையின்
தொன்மை காட்டும் சின்னமோ
இந்த யானைமலை?
கோசாகுளம் புதூரில்
இருந்து பார்க்கும் போது
ஒரு கோணம்.
வண்டியூர் கண்மாய்க்
கரையோரம் ஒரு கோணம்.
அழகர் கோயில் சாலையில் இருந்து
பக்கவாட்டில் ஒரு கோணம்.
ஒத்தக்கடைக்காரர்களுக்கோ
அது
தன்னுடனேயே தங்கி
படுத்திருப்பது போல்
ஒரு பிரமையின் கோணம்.
முன்கால் வைத்து
பின்வால் நீட்டி
தும்பிக்கையை கூட
வாய்க்குள் திணித்து
வெற்றிலை போட்டுக்கொண்டு
சாவகாசமாய்
குதப்பிக்கொண்டிருக்கும்
ஒரு நுட்பமான கோணம்.
நாக்கு சிவந்திருக்கிறதா
என்று அது
பளிச்சென்று துப்பிக் கேட்கும்
அந்த சூரியனிடம்!
சிவப்பாய் தன் மீதே
உமிழ்ந்து கொண்டது போல்
வைகறையும் அந்தியும்
எதிர் எதிர் கோணங்களில்
காட்டும்
தொலைதூர மதுரையின் கண்களுக்கு
எப்போதுமே
அற்புத விருந்து தான்
அந்த யானை மலை!
எங்கள் வரலாற்றின்
உயிர்ச்சிகரமாய்
ஓங்கி நிற்கும்
வாரணமே!
உன்னை
பாளம் பாளமாய் அறுத்து
அந்த எண்ணெய் தேசங்களுக்கு
விற்று
டாலர்கள் குவிக்க நினைக்கும்
வணிக வல்லூறுகள்
வட்டமிடுவது
உனக்குத்தெரியவில்லையா?
உன் தும்பிக்கைக்கு
உயிர் வரட்டும்
அந்த "தாராளமய வேதாளங்களை"
பிடித்து சுழற்றி அடிக்கட்டும்.
இருப்பினும்
இன்னொரு ஆபத்தும் இருக்கிறதே!
உனக்கு உயிர் வந்தால்
உன் தும்பிக்கையை
எப்போதும்
நீட்ட வைத்து விடுவார்களே
நாலணாவுக்கும் எட்டணாவுக்கும்
உன்னை
சலாம் போட
வைத்து விடுவார்களே!
எங்களுக்கு
நாலு வர்ணம்
தீட்டியது போதாது என்று
உன்
முக அலங்காரத்துக்கும்
மூவர்ணம் தீட்டி
வடகலையா? தென்கலையா?
என்ற வாதங்களின்
பட்டி மன்றம் ஆரம்பித்து விடுவார்களே!
கல்லில் மறைந்து கிடக்கட்டும்
அந்த மாமத யானை!
கல்லையே மறைக்கும்
அந்த மாமத யானைக்கு
கல்லறையாகிடு கல் யானையே!
கல்லறையாகிடு கல் யானையே!
=====================================================ருத்ரா
: 07-04-2012 19:42:23
No comments:
Post a Comment