Sunday, October 11, 2015

கனம்
















.கனம்
================================================ருத்ரா இ.பரமசிவன்

அவருக்கு இருமல் சற்று ஓய்ந்திருந்தது.
அவர் கடைசி தருணங்களுக்கு  வந்து விட்டார் .

"என்ன தான் உன் ஆசை ..சொல்லுப்பா  ?"
அருகில் இருந்த
அவரது ஆருயிர் நண்பர் கேட்டார்.

"இருட்டுக்கடை அல்வா ஒரு விள்ளல்"
சரிதான்
நண்பர் விரல் மடக்க ஆரம்பித்தார்.
அவரது பத்து விரல்களுக்குள்
அது அடங்க வில்லை.
அவர் சொல்லிக்கொண்டே இருந்தார் .
நண்பர் காகிதத்தில் எழுதத்தொடங்கினார்.
எழுதிக்கொண்டே இருந்தார்.
ஒரு காகிதம்...
இரண்டாவது காகிதம்...
மூன்றாவது காகிதம் ....
காகிதங்களை எண்ண முடியவில்லை
நூற்றுக்கும் மேலேயா..
நண்பர் ஓய்ந்து போய் விட்டார்.
கடைசி தருணங்களில்
பலப் பல "நூற்றாண்டுகளை"
சுருட்டி மடக்கி வைத்திருக்கும்
இவன் உள்ளத்துள் ....
என்ன "கனபரிமாணம்" இது?
இவன் கனவுகளையும் ஆசைகளையும்
ஒரு தட்டில் வைத்தால்
மறு தட்டில் எத்தனை நூறு உலகங்களை
வைக்க வேண்டியிருக்குமோ ?
இவன் வாழ்ந்ததை சொல்ல
"ஒரு பாரகிராஃ ப் "போதும்.
ஆனால் இவன் ஆசையின் கனம்
இப்போது
ஏதோ ஒரு பாதாளத்துள் இவனை
அமிழ்த்திக்கொண்டிருக்கிறது.
மூழ்கிக்கொண்டே  இருக்கிறான் .
இப்போது தான்  வாழ்க்கையின்
"நாவலை" சொல்ல ஆரம்பித்திருக்கிறான்...
அந்த எழுத்தாளன்  !
அதற்குள்...
உயிரெழுத்து வற்றிவிட்டதே 
அந்த மைக்கூட்டில்!
 நண்பரின் கண்களில்
கண்ணீர்க்கடல் !

============================================================











No comments:

Post a Comment