Sunday, July 17, 2016

சட்டைகள்




சட்டைகள்
===================================================ருத்ரா

காலப்பரிமாணங்களுக்கு
ஒரு சட்டை தேவைப்பட்டது.
பூவேலைத்தையல்களின்
ஊசிக்கோர்த்தல்களை
கனவு இழைகளாக்கி
என் ரத்த நாளங்களோடு
சேர்த்துக்கொண்டு
மனிதனாய்
இந்த பூமியில் இறங்கினேன்.
தையல் எந்திரம்
கட கடத்துக்கொண்டு  தான்
இருக்கிறது.
காலம் எதைத் தேடுகிறது ?
அதன் கால்தடங்களில்
மனிதக்கபாலங்கள்.
அதற்கு முன்னும்
அடர்ந்த காடுகள் போல்
எலும்புமிச்சங்களை
சிதறடித்து விட்டுப்போன
டி  ரெக்ஸ் டைனோசார்கள்.
மலை போல் தின்று
மலை போல் சாணம் இட்டு விட்டு
காணாமல் போய்விட்ட
பிரம்மாண்ட சதைக்கூடுகள்
விட்டுசென்ற சாசனங்கள்
நம் பொருளாதாரமாய்
நம் முதுகின் மீது...
ஒரு முதலாளியின் கனவு
இந்த உலக உருண்டையை
லாபம் எனும்
கோலா உருண்டையாக்கி
அன்றாட இறைச்சியின்
ருசிக்குள் சுருட்டிக்கொள்வது !
ஓ!காலச் சட்டையே !
எதை நீ சட்டை செய்யப்போகிறாய்?
இவர்களின்
மதங்களுக்குள்.....
கடவுள்களுக்குள் ....
காதல்களுக்குள்....
மனிதத்தையே தின்று
மனிதத்தையே
மலஜலம்  கழித்துக்கொள்ளும்
மிருக வாடை கொண்ட
சட்டங்களுக்குள்
எதை நீ சட்டை செய்யப்போகிறாய்?
கேள்வியின் அடி தாங்காமல்
பாம்பைப்போல
சட்டையை உரித்துப்போட்டுவிட்டு
ஓடுகிறாய்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்!

========================================


No comments:

Post a Comment