Sunday, December 27, 2015

ஓங்கி உலகளந்த....




ஓங்கி உலகளந்த....
=======================================ருத்ரா

ஓங்கி உலகளந்து
மூன்றாவது அடியை
மாவலியின் தலையில் வைத்து
அமிழ்த்திய‌
நெடுமாறனை
உள்ளே உணர்ந்து மகிழ்ந்து கலந்து
பாடியிருக்கிறார்
அருள் மிகு ஆண்டாள்.
அவரது இனிய தமிழ்
எல்லாவற்றையும் மறக்கடித்துவிடும்
எழுத்துப்போதை தான்.
அதில் ஊறிக்கிடக்கும்
பக்திப்போதையை எல்லாம்
தெளியவிட்டு சிந்தித்தால்
நமக்கு ஒரு கேள்வி பிறக்கிறது.
மாவலி ஒரு சிறந்த மக்கள் ஆட்சியாளன் என்று
மலையாளத்தில் இன்றும்
மலர்க்கோலங்கள் இட்டு
அவனைக்கொண்டாடுகிறார்கள்.
இறைவன்
அடே மாவலி
நீ என்னை (விஷ்ணுவை) விட்டு
சிவனை ஏன் போற்றுகிறாய்
என்று நேரிடையாக கேட்டிருக்கலாம்.
அதை விட்டு
கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும்
அவன் பலவீனத்தைப்பயன்படுத்தி
இரண்டடி நிலம் வரைக்கும்
குள்ள அந்தணர் வேடத்தில்
தாழங்குடை பிடித்து நின்றவர்
மூன்றாவது அடியில் விஸ்வரூபம் எடுத்து
அவனை அமிழ்த்திக்கொன்றதில்
என்ன நியாயம்?
எனவே
ஓங்கி உலகளந்து நின்றது
மாவலி தான்.
புராணங்களின் சப்பைக்காரணங்கள் எல்லாம்
தள்ளுபடி செய்யப்பட வேண்டியவை!
இதுவும் கூட‌
ஒரு மார்கழி சிந்தனை தான்.

====================================================

Sunday, October 11, 2015

கனம்
















.கனம்
================================================ருத்ரா இ.பரமசிவன்

அவருக்கு இருமல் சற்று ஓய்ந்திருந்தது.
அவர் கடைசி தருணங்களுக்கு  வந்து விட்டார் .

"என்ன தான் உன் ஆசை ..சொல்லுப்பா  ?"
அருகில் இருந்த
அவரது ஆருயிர் நண்பர் கேட்டார்.

"இருட்டுக்கடை அல்வா ஒரு விள்ளல்"
சரிதான்
நண்பர் விரல் மடக்க ஆரம்பித்தார்.
அவரது பத்து விரல்களுக்குள்
அது அடங்க வில்லை.
அவர் சொல்லிக்கொண்டே இருந்தார் .
நண்பர் காகிதத்தில் எழுதத்தொடங்கினார்.
எழுதிக்கொண்டே இருந்தார்.
ஒரு காகிதம்...
இரண்டாவது காகிதம்...
மூன்றாவது காகிதம் ....
காகிதங்களை எண்ண முடியவில்லை
நூற்றுக்கும் மேலேயா..
நண்பர் ஓய்ந்து போய் விட்டார்.
கடைசி தருணங்களில்
பலப் பல "நூற்றாண்டுகளை"
சுருட்டி மடக்கி வைத்திருக்கும்
இவன் உள்ளத்துள் ....
என்ன "கனபரிமாணம்" இது?
இவன் கனவுகளையும் ஆசைகளையும்
ஒரு தட்டில் வைத்தால்
மறு தட்டில் எத்தனை நூறு உலகங்களை
வைக்க வேண்டியிருக்குமோ ?
இவன் வாழ்ந்ததை சொல்ல
"ஒரு பாரகிராஃ ப் "போதும்.
ஆனால் இவன் ஆசையின் கனம்
இப்போது
ஏதோ ஒரு பாதாளத்துள் இவனை
அமிழ்த்திக்கொண்டிருக்கிறது.
மூழ்கிக்கொண்டே  இருக்கிறான் .
இப்போது தான்  வாழ்க்கையின்
"நாவலை" சொல்ல ஆரம்பித்திருக்கிறான்...
அந்த எழுத்தாளன்  !
அதற்குள்...
உயிரெழுத்து வற்றிவிட்டதே 
அந்த மைக்கூட்டில்!
 நண்பரின் கண்களில்
கண்ணீர்க்கடல் !

============================================================











Sunday, October 4, 2015

மனவிளிம்பு






மனவிளிம்பு
========================================ருத்ரா இ.பரமசிவன்


மனவிளிம்பு ஓரத்தில்
நுரை ஜரிகையிட்ட
ஆயிரம் கனவுகள்.
கடற்குருகுகள்
வெள்ளித்திவலைகளை
மீன்கள் என்று எண்ணி
அலகு கவ்வி கவ்வி
களைத்தது போல்
நானும்
அவள்
மின்னல்  வெட்டுப்
பார்வைகளையெல்லாம்
அதே வைரத் திவலைகளில் தான்
என் மௌன வலை வீசி
பிடிக்கத்துடிக்கிறேன் .
யார் அவள்?
யாரோ ?எவளோ ?
மின்னலுக்கு முகவரி எது?
அந்த பார்வை மட்டுமே
இந்த வானம் முழுவதும்
இந்த கடல் முழுவதும்
பரந்து விரிகிறது!
எனக்கு தோன்றும்
முகத்தையெல்லாம்
செதுக்கிப்பார்க்கிறேன்.
அதோ அந்த குருகுகளைப்போல.
அவற்றின் அலகு உளிகள்
அந்த நுரையில் எதை செதுக்குகின்றன?
அவை ஒவ்வொரு தடவை
கொத்தும்போதும்
என் இதயம் வலிக்கிறது.
அவை என்றாவது ஒரு நாள்
அப்படி செதுக்கி செதுக்கி
அவள் முகத்தின் வடிவை காட்டிவிட்டால்...
வேண்டாம்..வேண்டாம் .
என்னால் தாங்க முடியாது .
முகம் தெரியவே வேண்டாம் .
வேண்டாம் ..வேண்டாம்.
கைகளால்
அந்த குருகுகளை விரட்டுகின்றேன்.
அவை அங்கே தான் கொத்திக்கொண்டிருக்கின்றன.
மீண்டும் மீண்டும் விரட்டுகின்றேன்.
அவை கடலை நோக்கி பறக்கின்றன.
நானும் விடாமல் துரத்துகிறேன்
துரத்திக்கொண்டே இருக்கின்றேன்.
நீலக்கடல் முழுவதும் என்னுள் .
அந்த நீர்விளிம்பில்
கலங்கலாய்
சிவப்பாய்
ஒரு பிரம்மாண்ட செர்ரிப்பழம்.
அது சூரியப்பழமா !..
இல்லை
அவள் முகமா ?
தெரியவில்லை.
அந்த நீலக்கடல் முழுவதும்
என் இதயத்தின் மேல்.
அல்லது
என் உடம்பின் மேல்.
முள்ளு முள்ளாய் போர்த்த மீன் கூட்டம்
ஊசிப்பற்களால்
என்னை மொய்க்க
என் உடம்பு அங்கு மாயம்.
இருப்பினும்
அங்கு தான் என் இதயம்
ஆம்
இன்னும் அங்கு தான் என் இதயம்!

ஒவ்வொரு மாலையிலும்
அந்த கடற்கரையில் நடக்கின்றேன் ..
அந்த இதயத்தை தேடி...

=======================================================





என் இலட்சியம்.






என் இலட்சியம்.
========================================ருத்ரா

இது என்ன என்று எனக்குத் தெரியாது
இருப்பினும்
இந்த பிரம்மாண்ட பாறாங்கல்
என் தலை மீது ஏறியிருக்கிறது.
எப்படி ஏற்றினேன் என்றும் ஞாபகம் இல்லை.
இப்போது
முடியாது என்று கீழே போட்டாலும்
அதன் அடியிலேயே நான் நசுங்கிப்போவேன்.
இதை இறக்கிவிட எத்தனை ஆட்கள் கூப்பிடுவது?
அதோ அந்த அண்டவெளியில்
நின்று கொண்டு
இந்த பூமியை அப்படியே புரட்டி போடுவேன்.
அதற்கு ஏற்றாற்போல் நீங்கள்
எனக்கு ஒரு நெம்புகோல் தரமுடியுமானால்
என்றானமே ஆர்க்கிமிடீஸ்.
அவனை விடுங்கள்.
நம் செந்தில் (கவுண்டமணியின் கவுண்டர் பார்ட் தான்)
ஒரு படத்தில்
மலையை தூக்கிக்க்காட்டுகிறேன் என்று சொல்லி
"மோடி மஸ்தான் " வேலையெல்லாம் செய்து
கூட்டம் சேர்த்து
கடைசியில் சொல்லுவார்
யாராவது ஒருவர் வந்து
என்னுடன் ஒரு கை கொடுத்து
தலையில் தூக்கி வையுங்கள் பார்க்கலாம்.
அடுத்த கணமே
மலையை தூக்கிக்காட்டுவேன் என்பார்.
அது போல் தான்
இந்த பாறாங்கல்.
இறக்கி விடவோ
தூக்கி எறியவோ
கை கொடுக்க ஆளில்லை.
கனக்கிறது.
கழுத்து நரம்புகள் புடைக்கின்றன.
கண் பஞ்சடைக்கிறது.
மூச்சை அடைக்கிறது.
ஆனாலும் தம் கட்டுகிறேன்.


அதோ விழுகிறது.
பிடியுங்கள்! பிடியுங்கள்!
......
.......
தடால்..
பாறங்கல் அடியில்
கரப்பான் பூச்சியாய் நான்!

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍============================================================

Tuesday, September 29, 2015

ராமன் எத்தனை ராமனடி !






ராமன் எத்தனை ராமனடி !
=====================================================================
ருத்ரா இ.பரமசிவன் 


துப்பாக்கிகளை கொண்டு விவசாயம் 
செய்து விடலாம் என்று 
மூளை  முறிந்தவர்கள் 
அறுவடை செய்ததெல்லாம் 
நொறுங்கிய கட்டிடங்களும் நசுங்கிய பிணங்களும் தான்.
மனிதத்தின் குரல் 
எந்த துப்பாக்கி ரவைகளாலும் 
தூளாக்க முடியாதது.
தேச பிதாவே 
நூற்றிஐம்பது ஆண்டுகளை நோக்கி நடக்கும் 
உன் கைத்தடி ஊன்றிய 
தடங்களின் ஒலிகள் 
எங்கள் இதயங்களில் தட தட வென்று 
கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றன.
சுதந்திரமும் ஜனநாயகமும் 
இங்கே 
குத்தாட்டம் போ டும் சினிமாக்களாய் 
ஒளியை 
எங்கோ தொலைத்த 
நிழலைத் துரத்திக்கொஂண்டு 
ஓடிக்கொண்டிருக்கின்றன.
வெள்ளைக்காரனிடம் ஒட்டு ப்பெட்டியைத்தானே 
வாங்கிக்கொடுத்தாய் !
இன்னமும் 
இவர்கள் இதில் குப்பையைத்தான் 
கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
பணபொருளாதாரத்தின் 
காகிதக்காடுகளில் 
சாதிமதப்  பேயாட்டங்களும்
"பிளாக்ஸ் போர்டுகள்"கொண்டு கோட்டை கட்டி 
ஆண்டு கொண்டிருக்கின்றன .
குண்டுகளை 
மார்பில் ஏந்தியும் 
உன் சர்வோதயக்கனவை நினைத்து தானே 
ஹே ! ராம் !
என்றாய்.
அன்று அந்த ரத்தச்சிவப்பின் அந்தியில் 
உன்னில் உன்னைத் 
தந்தவனைக்கூப்பிட்டாயா?
உன்னைக் 
கொன்றவனைக் கூப்பிட்டாயா?

==============================================================

Monday, September 28, 2015

கொஞ்சம் பொறு

2014-07-26_19-44-50_753.jpg


கொஞ்சம் பொறு ===================================================ருத்ரா ஓ!சூரியனே! கொஞ்சம் பொறு. உன்னில் முகம் கழுவிக்கொள்கிறேன். இரவின் மரங்கொத்திப்பறவைகள் செய்த காயங்களுக்கு உன் டெட்டால் கொண்டு கழுவிக்கொள்கிறேன். அந்த "உழைப்பாளர் சிலை அருகே நில் வந்து விடுகிறேன்" என்றாள் அந்த பெரும்பாறையும் கடப்பாரையும் நரம்பு புடைத்த அந்த கரங்களும் என்னை நசுக்கிக்கொண்டே இருந்தது தான் மிச்சம். கொஞ்ச நேரத்தில் கொஞ்சி கொஞ்சி கிணு கிணுவென்று "செல்லு"வாள் "சாரிடா" என்று. காதலுக்கு கண்ணுமில்லை. முகமும் இல்லை. எந்த முகத்தை உன்னிடம் கழுவிக்கொள்ள? உன் ஆரஞ்சு லாவாவில் அவள் ஆப்பிள் கன்னங்களை வார்ப்பு செய்யவே இன்னும் ஆசை. விடியல் எனும் கோடி கோடி பக்கங்கள் உள்ள நாவலை ஒவ்வொரு பக்கமாய்த்தான் தினமும் எழுதுகிறாய். என் பக்கம் இன்னும் உன்னிடம் விடியவில்லை. இன்று மீண்டும் அந்த‌ இ.சி.ஆர் ரோடில் கடல் அலை உமிழும் நுரைகளோடு கொஞ்சிக்கொண்டிருக்கச்சொல்வாள். ஒரு நாள் கிழக்கு என்பதே திசை மாறும் அப்போது இந்தக்காதலின் மலைப்பாம்பு போன்ற நீண்ட குகையின் மறுமுனை தெரியும். தெரிந்து என்ன செய்வது? இந்த பஞ்சு மிட்டாய்க்கூழாகி வாழ்க்கை எனும் அர்த்தத்தின் விலா எலும்புகள் எல்லாம் நொறுங்கிப்போய் இருக்கும். உன் தீயில் தெரியும் அந்த சோப்புக்குமிழிகளை பிடிக்கவே எனக்கு இன்னும் அந்த ஆசை. ====================================================================

Saturday, September 26, 2015

தமிழுக்கும் அமுதென்று பேர் !



தமிழுக்கும் அமுதென்று பேர் !
============================================ருத்ரா இ.பரமசிவன்


நிழல்  குளிக்கும் கனவுகள் !
பின்னணியில்
நீலச்சதை பிதுங்கி
இந்த கீற்றுகளோடு
கிச்சு கிச்சு தாம்பாளம்
விளையாட ஆர்வங்கொண்டு
சிலு சிலுக்கிறது.
இளநீர்க்குலைகள் ஒவ்வொன்றும்
தென்னையின் சொப்பனங்கள் .
மனிதனின் தாகம் தீர்க்க
அரிவாளால் சிரச்சேதம் செய்யப்பட
காத்திருக்கிறது.
யாரைக்கே ட்டார்கள் ?
எதைக்கேட்டார்கள்?
இந்த மண்ணையா?
அந்த மட்டைகளையா?
அதுவும்
இலங்கையின் தென்னைமரங்களின்
இளநீர் அவ்வளவும்
தமிழனின் ரத்தம்.
காற்று இடைவெளியிலும்
நஞ்சு ஊற்றும்
சிங்கள இனவெறி தான்.
பூமியின் அடியின் வேர்த்தூவிகள்
அத்தனையும்
தமிழின் உதிரம் குடி த்தவை.
மிச்சமான எலும்பு மஜ்ஜைக்குள்ளும்
விடுதலையின்  தாக உறுமல்கள்
கேட்கின்றனவோ!
தென்னை மரம் எங்கிருந்தால் என்ன?
தலை விரிகோலமாக அதன் கூந்தல்கள்
சிலிர்ப்பது
ஒற்றைச்சிலம்பு ஆதாரம் கொண்டு நிற்கும்
ஒரு சீற்றத்தின் உருவகமாக   தெரிகிறது.
உலகத்து மண்ணின்
அடிக்குழம்பு
லாவாவில் இருந்து அல்லவா
தமிழின் "அகர முதல "ஒலிக்கிறது!
ஐநா மன்றத்தின்
செவிட்டு  சன்னல்களையும் தாண்டி
இது எதிரொலித்தே தீரும்!
இருப்பினும்  இந்த
இளநீரின் கண்ணீரும்
இனிக்கத்தான் செய்கின்றது !
ஏனெனில்
தமிழுக்கும் அமுதென்று தானே பேர் !

============================================