Monday, September 21, 2015

பீட்ஸா




பீட்ஸா
==============================================ருத்ரா இ.பரமசிவன்.

எவ்வளவு நேரம் நின்றேன்
இந்த ஒளி மரத்தின் அடியில்?
தெரியவில்லை.
எப்படியும் வருவேன்
என்று சொல்லியிருக்கிறாள்.
பெல்பெப்பர் டொமோடோ ஆலிவ்
டாப்பில்
மணமணக்க அந்த பீட்ஸாவை
ஒரே தட்டில்
இருவரும் ஒரே கடியில்
பாலாடை நூல் இழுத்து
வாய்சுவைக்கும் கற்பனயில்
நேரம் நீட்டித்தது பற்றி
கவலையில்லாமல்
விளக்குக்கம்பத்து
அந்த கூட்டல் குறியில்
கசிகின்ற பால் ஒளியில்
நின்றிருந்தேன்.
சங்கத்தமிழ் பாடல் வரி ஒன்றில்
திளைத்திருந்தேன்.
பாலைவனத்தில்
துளியுண்டு கிடக்கும் நீரை
ஆண் மானும் பெண் மானும்
அது குடிகட்டும் என்று இதுவும்
இது குடிக்கட்டும் என்று அதுவும்
"கள்ளத்தில் ஊச்சும்" காட்சிதான் விரிந்தது.
தண்ணீர் அப்படியே இருந்தது
அவற்றின் கானல் நீர்த்தாகமோ
தீர்ந்து போயிருந்தது.
என் கற்பனை சடக்கென்று நின்றது.
அவள் திடீரென்று காரில்
அவன் முன் வந்தாள்.
ஹேய்! இவர் என் டீம் மேனேஜர்.
பீட்ஸா ஹௌஸ் டின்னருக்கு
கம்பெனியாக என்னை அழைத்தார்.
உனக்கு தகவல் தர முடியவில்லை.
நாங்கள் சாப்பிட்டு விட்டோம்.
உனக்கும் ஒரு பாக்ஸ் வாங்கியிருக்கிறோம்.
ம்ம் ஏறு.ரூமில் சாப்பிடலாம்.
நானும் ம்ம் என்று முனகி
காரில் அழுந்திக்கொண்டேன்.
அவர் ஹாய் என்றார்.
நானும் தான்.
அவர் கார் ஓட்டினார்.
அவர் அப்பார்ட்மென்ட வரைக்கும்
ஓட்டிக்கொண்டு வந்தார்.
அவர் முகத்தைக் கவனித்தேன்.
ஒரு கடுவாய் ஒரு முயல்குட்டியை
குத்திக்கிழித்து முழுங்கிய பிறகும்
வாய்க்கடையில்
முயலின் பிஞ்சு குடல் இழைகள்
பிசிறு தட்டி இருக்குமே
அப்படி இருந்தது.
பீட்சாவை அந்தப்பாடா படுத்தியிருப்பார்?
இறுகிய முகத்துடன் ஆனால்
இனிய குரலில் "பை"
சொல்லிவிட்டு அவர் ரூமுக்குப்போனார்.
அங்கே நிறுத்தியிருந்த
எங்கள் காரில் எங்கள் ரூமுக்கு
அந்த பீட்ஸா பாக்ஸுடன்
வந்து சேர்ந்தோம்.
அதே பெல் பெப்பர் டொமொட்டோ ஆலிவ்
டாப்பில் பீட்ஸா ஆவி பறக்க‌
எங்கள் சாப்பாட்டுக்கு தயார் ஆனது.
பீட்ஸாவை
ஒரே கடியில் ஒரே வாயில்
பாலாடை பிசினை இழுத்து இழுத்து
சாப்பிட்டோம்.
இல்லை.இல்லை
"கள்ளத்தில் ஊச்சும்" மான்களைப்போல‌
அந்த வெள்ளை நூல்களை
இழுத்து இழுத்து சுவைப்பதாக‌
"கள்ளத்தில் ஊச்சினோம்"
பசியில்லாமலேயே பசித்த‌து போல‌
அவள் புசித்தாள்.
பசியிருந்தும் பசியில்லாமல்
நான் புசித்தேன்.

===========================================================

No comments:

Post a Comment