Monday, September 21, 2015

முட்கள்


முட்கள்
    ===================================================================
ருத்ரா.இ.பரமசிவன்



முண்டைக்கண் எண்கள் துருத்திய‌
கடிகார வட்டத்தில்
அது என்னை
குத்தி குத்திப்புண்ணாக்கியது.
ஓரப்பார்வை பார்த்து பார்த்து
காக்கை தன் கூரிய அலகுகளால்
கொத்துவது போல்
என்னக்கிளறியது.
நான் ஒன்றும் காதலிக்காக‌
காத்திருக்கும் தவத்துக்காக‌
இப்படி கழுவேற்றப்படவில்லை.
கிரேக்கர்கள் 
மணற் கடிகையை
கவிழ்த்து கவிழ்த்து வைத்துப்பார்த்து
எத்தனை சாம்ராஜ்யங்களை
மண்ணுக்குள் புதைத்திருப்பார்கள்.
நான் 
குத்தொக்க குத்துக்கு சீர்த்தவிடத்தை
எதிர்பார்த்துக்   காத்திருக்கும்
கொக்கும் அல்ல.
2 நிமிடம் 41 வினாடிகள்
எனும் நீண்ட அனக்கொண்டா பாம்பு
என்னை விழுங்கி
என் கழுத்து வரை வந்து விட்டது.
அப்பப்ப!
எங்கே போய்விட்டாள்
என் இல்லத்தரசி?
பால் பொங்கி கீழே கொட்டிவிடப்போகிறது!
ஜாக்கிரதை!
என்று போய்விட்டாள்.
இன்னும் வரவில்லை.
நானும் கடிகாரவட்டத்தைப்
பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்.
பால் கொதி வர‌
4 நிமிடம் ஆகுமாமே!
சப்பாத்திக்கள்ளியின்
அடர்ந்த முட்காட்டில் கிடக்கிறேன்.
காலத்தின் கூரிய முட்களையா
தினம் தினம் 
என் அன்புக்குரியவள் தாங்குகிறாள்!
ஐயோ ஐயோ..
அதற்குள் நுரை பொங்கி..
ஸ்டவ் எல்லாம் வழிந்து...
அந்த விநாடி முள்ளில் நான்
நார் நாராய் தொங்கிக்கிடக்கிறேன்.

====================================================


பீட்ஸா




பீட்ஸா
==============================================ருத்ரா இ.பரமசிவன்.

எவ்வளவு நேரம் நின்றேன்
இந்த ஒளி மரத்தின் அடியில்?
தெரியவில்லை.
எப்படியும் வருவேன்
என்று சொல்லியிருக்கிறாள்.
பெல்பெப்பர் டொமோடோ ஆலிவ்
டாப்பில்
மணமணக்க அந்த பீட்ஸாவை
ஒரே தட்டில்
இருவரும் ஒரே கடியில்
பாலாடை நூல் இழுத்து
வாய்சுவைக்கும் கற்பனயில்
நேரம் நீட்டித்தது பற்றி
கவலையில்லாமல்
விளக்குக்கம்பத்து
அந்த கூட்டல் குறியில்
கசிகின்ற பால் ஒளியில்
நின்றிருந்தேன்.
சங்கத்தமிழ் பாடல் வரி ஒன்றில்
திளைத்திருந்தேன்.
பாலைவனத்தில்
துளியுண்டு கிடக்கும் நீரை
ஆண் மானும் பெண் மானும்
அது குடிகட்டும் என்று இதுவும்
இது குடிக்கட்டும் என்று அதுவும்
"கள்ளத்தில் ஊச்சும்" காட்சிதான் விரிந்தது.
தண்ணீர் அப்படியே இருந்தது
அவற்றின் கானல் நீர்த்தாகமோ
தீர்ந்து போயிருந்தது.
என் கற்பனை சடக்கென்று நின்றது.
அவள் திடீரென்று காரில்
அவன் முன் வந்தாள்.
ஹேய்! இவர் என் டீம் மேனேஜர்.
பீட்ஸா ஹௌஸ் டின்னருக்கு
கம்பெனியாக என்னை அழைத்தார்.
உனக்கு தகவல் தர முடியவில்லை.
நாங்கள் சாப்பிட்டு விட்டோம்.
உனக்கும் ஒரு பாக்ஸ் வாங்கியிருக்கிறோம்.
ம்ம் ஏறு.ரூமில் சாப்பிடலாம்.
நானும் ம்ம் என்று முனகி
காரில் அழுந்திக்கொண்டேன்.
அவர் ஹாய் என்றார்.
நானும் தான்.
அவர் கார் ஓட்டினார்.
அவர் அப்பார்ட்மென்ட வரைக்கும்
ஓட்டிக்கொண்டு வந்தார்.
அவர் முகத்தைக் கவனித்தேன்.
ஒரு கடுவாய் ஒரு முயல்குட்டியை
குத்திக்கிழித்து முழுங்கிய பிறகும்
வாய்க்கடையில்
முயலின் பிஞ்சு குடல் இழைகள்
பிசிறு தட்டி இருக்குமே
அப்படி இருந்தது.
பீட்சாவை அந்தப்பாடா படுத்தியிருப்பார்?
இறுகிய முகத்துடன் ஆனால்
இனிய குரலில் "பை"
சொல்லிவிட்டு அவர் ரூமுக்குப்போனார்.
அங்கே நிறுத்தியிருந்த
எங்கள் காரில் எங்கள் ரூமுக்கு
அந்த பீட்ஸா பாக்ஸுடன்
வந்து சேர்ந்தோம்.
அதே பெல் பெப்பர் டொமொட்டோ ஆலிவ்
டாப்பில் பீட்ஸா ஆவி பறக்க‌
எங்கள் சாப்பாட்டுக்கு தயார் ஆனது.
பீட்ஸாவை
ஒரே கடியில் ஒரே வாயில்
பாலாடை பிசினை இழுத்து இழுத்து
சாப்பிட்டோம்.
இல்லை.இல்லை
"கள்ளத்தில் ஊச்சும்" மான்களைப்போல‌
அந்த வெள்ளை நூல்களை
இழுத்து இழுத்து சுவைப்பதாக‌
"கள்ளத்தில் ஊச்சினோம்"
பசியில்லாமலேயே பசித்த‌து போல‌
அவள் புசித்தாள்.
பசியிருந்தும் பசியில்லாமல்
நான் புசித்தேன்.

===========================================================

Tuesday, November 25, 2014

கொள்ளைச்சிரிப்பு

2014-07-08_09-38-36_208.jpg



கொள்ளைச்சிரிப்பு
==================================================ருத்ரா


வெள்ளைச்சிரிப்பா?
கொள்ளைச்சிரிப்பா?
அன்றொரு நாள் நான்
சிறைப்பட்டுப்போனேன்.
மறுபடியும்
அதற்கு
உன் காதலின்
ஏழு மலை ஏழு கடல் எல்லாம் தாண்டி
"மாங்கல்யம் தந்துநானே" எனும்
தீவுக்குள் வந்து தேடுகின்றேன்.
உப்பு புளி மிளகாய்களின்
அஞ்சறைப்பெட்டிக்குள்ளா
வைத்திருந்தாய்?
தெரியவில்லை!
மழலை நந்தவனத்துள்
அது புதைந்தே போனது.
எத்தனை பாம்புகள்?
எத்தனை சட்டைகள் உரித்தன?
இன்னும்
நான் அதைப்பார்க்க வில்லையே.
வெள்ளிவிழுதுகள்
மண்டிய வயதுகளின்
ஆரண்யத்திலும் தேடுகின்றேன்.
எங்கு
அதை புதையல் ஆக்கினாய்?
அந்த உயிர் சுருட்டும் போதை
புகை நெளிவாய்
என்னை
பொல்லாத பாடு படுத்துகிறது?
எப்போது நான்
அதை பார்ப்பது?
வாக்கிங் என்ற புதிய பரிமாணத்தில்
தினம் தினம்
பூங்காற்றின் முகம் வருடித் தேடுகிறேன்.
மைல் கணக்கு பார்த்து
நான் நடந்ததின் நீளத்தை அடுக்கினால்
அந்த நிலாவுக்கே
முத்தம் கொடுத்துவிட்டு
இந்நேரம் திரும்பியிருக்கலாம்..
அதோ
அங்கே தெரிகிறதே.
சட்...
"என்னா பெரிசு ..பாத்துப்போ"
அவன் அடித்துப்போட்டுவிட்டு
பைக்கில் விரைந்து விட்டான்.
தடுமாறி விழுந்து
கல்லில் அடிபட்டு...
ஆகா! இனிமை !இனிமை!
பார்த்துவிட்டேன்....ரத்தம் வழிய ...
அந்த பூக்களின் மீது விழுந்து கிடக்கிறேன்.
அந்த வெள்ளைச்சிரிப்பு இங்கேயா இருக்கிறது!
ஆனாலும் சிவப்பாய் சிரிக்கிறதே..
சாலையோரத்தில் எனக்கு விழுந்தது
முற்றுப்புள்ளியா? வியத்தல் குறியா?
கால சமுத்திரத்தின்
அடி ஆழத்தில் நான்..

"ஸ்கல் இஞ்சுரி..ஒன்றும் சொல்ல முடியாது"
டாக்டர் ஸ்டெத்தை சுருட்டி
பைக்குள் திணித்தார்.
கேவல்களின் காட்டுக்குள் நீ!
எப்போது  உன் முகத்தில்
நான்
அந்த வெள்ளைப்பூக்களை பார்ப்பது?

========================================================

Saturday, November 22, 2014

ஒரு சொட்டு கண்ணீர்




ஒரு சொட்டு கண்ணீர்
===============================================ருத்ரா இ.பரமசிவன்


அந்த ஆயிரம் ஆயிரம் பிணங்களுக்காக
என்னால் முடிந்தது.......


தென்னை மரங்கள் தலை சிலுப்பும்
அந்த சின்னத்தீவில்
எறும்புகளுக்கு கூட நோவும் என்று
மயில் பீலிகள் கொண்டு செய்யப்பட
துடைப்பம் கொண்டு கூட்டப்படும்
புத்த விகாரைகள் அன்பை ஒலிக்கும்
அந்த பூமியில்
தமிழ் மொழி
எலும்புக்குப்பைகளாய்
எருவாகிப்போனதற்கு
என்னால் முடிந்தது .....

இங்கே காலி டப்பாக்கள்
தட்டி கொட்டி
விடுதலை கீதம் என்று
வீண் ஒலிகளை
கிளப்பிக்கொண்டு கிடக்கையில்
என்னால் முடிந்தது .....

தேர்தல் கால
பணங்காய்ச்சி மரக்காட்டுக்குள்
வாக்குறுதிகளின் மராமரங்களில்
அம்பு பட்டு அமுங்கிப்போன
குரல்வளைகளில் நெறிக்கப்பட்ட நிலையில்
என்னால் முடிந்தது .....

தமிழ்
இங்கே மரத்துப்போனது.
தமிழ்
இங்கே மரித்துப்போனது .
தமிழ்
இங்கே மக்கிப்போனது
என்ற அவலங்களினூடே
என்னால் முடிந்தது...
அந்த
ஒரு சொட்டுக்கண்ணீர் மட்டுமே.


Wednesday, July 23, 2014

ருத்ரா எனும் ...

ருத்ரா எனும் ...

ருத்ரா எனும் ...
பரமசிவன் இசக்கி ஆகிய நான்
கல்லிடைக்குறிச்சி தாமிரபரணியின்
பளிங்கு சுவடிகளில் திளைத்து வந்தவன் .
திலகர் வித்தியாலயம் எனும் உயர்நிலைப்பள்ளியில்
இந்த பட்டாம்பூச்சியின்
புழுக்கூட்டு மண்டலம் உடைபடாமல் கிடந்தபோதும்
கற்பனையின் ஏழு வர்ண நெருப்பூற்றி வளர்த்தது
அந்த தாமிரபரணி தான்.

நீருக்கும் தாகம் உண்டு.
இனிக்கும் தமிழ் தாகம் இது.
தூரங்கள் தொலைத்து
அருகுவோம் வாருங்கள் .....தமிழ்
பருகுவோம் வாருங்கள் !

அன்புடன் ருத்ரா 

வாத்துக்குள் பூத்த நெருப்பு



வாத்துக்குள் பூத்த நெருப்பு
======================================================ருத்ரா

என்ன வெட்கம் அருகில் வாயேன்.

ஏன் அங்கேயே இரு.எல்லாம் எனக்குத்தெரியும்.

என்ன தெரியும்.

தெரிந்தது தெரியும்;அறிந்தது அறியும்.

ஏய்..இரு.நிறுத்து நிறுத்து..

இப்போதானே நீரில் குடைந்து நீரில் நெய்து

ஏதோ ஒரு மொக்கை போட்டாய்!

அது எங்கே?..காணோம்.

ஆமாம்..உனக்கு எப்போ பார்த்தாலும்

காதல் காதல் காதல் தானா?

சிறகு விரி.

சிறகு மூடு.

அது காற்று.உயிர்க்காற்று.

அதை உள்ளிழு..வெளியிடு.

ம்ஸ்ஸ்ஸ்...என்கிறாய்

அதுவே அன்னம் அதுவே ஹம்சம்.

தெந்தமிழில் அன்னம்.வடதமிழில் அம்சம்.

சிறகு உருவகம்.காற்று உணர்வகம். உயிர் உள்ளகம்.

உனக்கு வேண்டுமானல் காதல் என்று சொல்லிக்கொள்.

ராமகிருஷ்ண மடத்தில் வாத்து படம் தானே முகப்பு.

வாத்து மடையர்களுக்கு வேண்டுமானால்..அது

குவாக் குவாக் குவாக்..

குவாண்டம் விஞ்ஞானிகளுக்கு

அது குவார்க் குவார்க் குவார்க்

அப் டவுன் ஸ்ட்ரேஞ்ச் சார்ம் டாப் பாட்டம்.

துகள் சுழல்களில் மூவர்ண பிரபஞ்சம்.

கவுதம உவாச்ச‌

அப்புறம்

சுனத்குமார் உவாச்ச‌
.............

பரமஹம்ஸோம் பானுகோடி ப்ரதிகாஸம்..யேனேந்த வ்யாப்தம்...
.....
........

ஹம்ஸ ஹம்ஸேதி சதா த்யாயன்ஸர்வேஷு தேஹேஷு வ்யாப்த வர்த்ததே

சூரியனின் கோடி கோடி

ஒளிப்புருசுகளின் கற்றைகள்

வருடிய பெரிய்ய்ய்ய்ய்ய வாத்துச்சிறகுகள்

இந்த அண்டம்.

அது அன்னமா? சிரிப்பா?

காற்றா? உயிரா?

ஆழ்நினவின் முக்குளிப்பில்

உடல் எல்லாம் உயிர் எல்லாம் உணர்வு எல்லாம்

விரிகிறது விரிகிறது..

விரிந்து கொண்டே போகிறது.

இதை நாம் காதல் என்போம்...

வா..நீருக்குள்

அலகுகள் உரசி தீயின் முத்தம் களிப்போம்

குளிர் பூந்திளைச்சல்களில்...

இதம் ஹம்ஸோபனிஷதம் சமாப்தியே...

=========================================================ருத்ரா




Sunday, June 1, 2014

புகை




புகை
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍====================================ருத்ரா இ.பரமசிவன்

நெஞ்சுக்கூட்டின் 
பிருந்தாவனத்தில்
சிதை மூட்டவா சிகரெட்?

சூப்பர்ஸ்டாருக்கு 
குச்சி மிட்டாய்
உனக்கு மட்டுமே
கொள்ளி மிட்டாய்.

காதலிக்காக 
சிகரெட் பிடித்தான்.
உதிர்ந்த சாம்பல் எழுதியது.
ஐ லவ் யூ....

வாழ்க்கையை 
பற்றவைக்கும் முன்னே
சாம்பல் அவனை
தின்று விட்டது.

கொஞ்சம் எரிந்தாலும்
தீக்குச்சி தப்பித்துக்கொண்டது.
புகை
அவனை விழுங்கி விட்டது.

சவப்பெட்டி 
வியப்புடன் கேட்டது.
அந்த‌
சிகரெட் சர்க்கஸ்காரனா இவன்?

கதாநாயகி முகத்தில்
புகையை ஊதினான் கதாநாயகன்.
சும்மாச்சுக்கும் ஸ்லைடு உதட்டோரம்.
"...உடல் நலத்துக்கு கேடு"

விளம்பரத்திற்கு கூப்பிட்டிருந்தார்கள்
"எலும்புக்கூடு"கூட கேட்டது
அஞ்சு கோடி சம்பளம்.

இலை விரித்து பந்தி போட்டது
புகையிலை..அவனுக்கு
இறுதியாய் சுடுகாட்டில்.

நுரையீரலில் புற்று வைத்து
எழுதிய சிகரெட்டின்
வால்மீகி ராமாயணத்தில் ஒரே காண்டம்
சுடுகாட்டுக்காண்டம்.


===============================================ருத்ரா