Tuesday, September 22, 2015

தேடுகிறேன்




தேடுகிறேன்
================================================ருத்ரா இ.பரமசிவன்

என் சுவாசத்தை தேடுகிறேன்.
இது நுரையீரல் தாண்டிய மூச்சு.
எல்லாவற்றிலும் ஒற்றி ஒற்றி எடுத்து
தேடிப்பார்க்கிறேன்.
அழுகிய பிணங்களில் கூட
"வாசுதேவன்"கன்னங்குழியச்சிரிக்கிறான்.
கசாப்புக்கடைகளில்
தோலுரித்து தொங்கிக்கொண்டிருப்பவைகளில் கூட‌
உலகமே விழியாய் கண்ணீர்த்துளிர்க்கும்
கல்வாரி சித்திரங்களைக்காண்கிறேன்.
அகலமான அந்த வட்ட மரக்கட்டையில்
சதைத்துணுக்குகள் கத்தியின் சிற்பமாய்
மனிதப்பசியின் தீகொழுந்துகளில்
நெளிந்து கொண்டிருக்கும் இடுக்குகளில் கூட‌
என் சுவாசத்தை தேடுகிறேன்.
டால்ஃபின் எனும் கடல் சுவடிகளில்
அதன் அல்காரிதம்களின்
கண்ணுக்கு தெரியாத ஒரு பாஸ்வர்ட்
அதன் செதில்களில் சிக்கிக்கொண்டிருப்பதை
நான் தேடுகிறேன்.
வினாடியை பில்லியன் துண்டுகளாக்கி
எந்த துண்டில் அது
கடலில் பத்து பன்னிரெண்டு ரிக்டர் ஸ்கேலாக்கி
கொப்பளித்து
லட்சக்கணக்கான மக்களை விழுங்க‌
காத்திருக்கிறதோ
அந்த மூச்சுக்குமிழியை தேடுகின்றேன்.
அதோ அந்த புல்லாங்குழல்
பல்லாயிரக்கணக்கான
ஜன்ய ராகங்களில்
அல்லது மேள கர்த்தா ராகங்களில்
எந்த "புன்னாக வராளியின்"
அடையாளம் மாறிப்போன ஒரு புன்னாக வராளியில்
இந்த உலகத்தின் மேக்னாக்குழம்பை
வெற்றிலை குதுப்பி உமிழப்போகிறதோ?
ஆம்! அதைத்தான் தேடுகிறேன்.
அது என் மூச்சுச்சுவட்டில் இடறும் வரை
இங்கே எனக்கு எல்லாமும் கடவுள்களே!
அது வளையல் பூச்சியாய் இருந்தாலும்
பரவாயில்லை.
அதனோடு வளைந்து வளைந்து
வலம் வருவேன்.
கடலின் திவலைகள் வைர நெக்லஸ் பூட்டி
ஒவ்வொரு தருணங்களையும்
அழகு படுத்துவதை
அணு அணுவாய் ரசித்துக்கொண்டே
அந்த அணு வெடிப்பை தேடுகின்றேன்.

===================================================

வானத்துண்டுகள்




வானத்துண்டுகள்
=========================================================
ருத்ரா இ.பரமசிவன்



வான நீலத்தையும்
ஒரு இருட்டுக்கடை 
அல்வாத்துண்டுகளாய்
போட்டிருக்கிறார்ளே!
அந்த நீலவண்ணத்துக்கும்
எவ்வளவு இனிப்பு!
இது 
சிலருக்கு குழலூதும் கண்ணன்.
சிலருக்கு
மயில் வாகனத்தின்
"மயில் கழுத்து".
"மயில் கழுத்து காஞ்சி புரத்தில்"
கழுத்து சுளுக்க நடைபோடுபவர்களுக்கு
என்னவோ
கிளிமஞ்சாரோ சிகரத்திலேயே 
நடக்கும் மிடுக்கு இது.
நீலக்கடலை சில்லு போட்டு
தட்டில் ஏந்தி நீட்டுவது யார்?
அவள் அன்று இந்த டிசைனில்
உடுத்து வந்து என்னை
சுருட்டிக்கொண்டு போனவள்
இன்னும் 
என்னை 
என்னிடம் தரவே இல்லையே!
அவளையும் காணோம்!
அந்த புடவையையும் காணோம்.
கடைவாசலில் அலங்காரமாய்
வேதாளங்கள் போல் தொங்கும்
அந்த குவியலிடையே
நடையாய் நடந்து நானும் தேடுகிறேன்.
என்னில் அவளை!
அவளில் என்னை!

=============================================================

பொறிகள்



பொறிகள்
=========================================================ருத்ரா

ஒவ்வொரு வருடமும்
சிவகாசியின் அடிவயிற்றுப் பொறிகளே
நம் தீபாவளிகள்.

தீபாவளிக்கு துணியெடுக்க‌
கொஞ்சம் ஓவர் டைம் செய்ததில்
மொத்த குடும்பமும் "கரி"

வதம் செய்யப்பட்ட நரகாசுரன்கள்
எப்படி
வாக்குப்பெட்டிக்குள் குவிந்தார்கள்?

சீனாவுக்கும் கூட‌
நரகாசுரன்கள் எல்லாம் ரூபாயில்
சூடாய் வியாபாரம் ஆகும்.

லெஷ்மி(க்கு) வெடி வைத்துவிட்டு
லெஷ்மியை வீட்டுக்குள் கூப்பிடுவதே
அர்த்தமுள்ள இந்து மதம்.

இலங்கையில் கண்டுபிடித்தார்கள்.
இந்தியாவும் பாராட்டியது.
தென்னைகளுக்கு தமிழ் உயிர்களே உரம்!

இளைய யுகத்துக்கு
"கருப்பு வெள்ளை" "கபாலிகளே"
வர்ண வர்ண விடியல்கள்.

இந்து மதத்தை
தலைகீழாய் நட்டுவைத்தால்
அதுவே "இந்துத்வா"

மூஞ்சுறுகளின் மீசை மயிர்களுக்கும்
தங்க முலாம் தான்.
பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலம்.

யார் அங்கே? இந்த இந்தியாவையே
சுருட்டி மடக்கி இங்கே கொண்டுவாருங்கள்.
"நூத்துப்பத்து விதி"

_________________________________________________________________

Monday, September 21, 2015

கைத்தடி

kaiththadi.png

கைத்தடி ===================================================ருத்ரா இ.பரமசிவன் சின்னக்குருவியே எத்தனை நாட்களுக்கு இந்தசன்னலில் இப்படி விசிலடித்துக்கொண்டிருப்பாய்? இந்த வானத்தை உன் ஊசி ஒலியால் கந்தல் ஆக்குகிறாய் என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறோம். அதில் ஒரு "கந்தல் அலங்காரமோ" இல்லை "ஓட் டு நைடீங்கேலோ" கூட‌ இருக்கலாம். உன் தொண்டையில் இந்த வானம் முழுதுமே கூடு கட்டும் போது உனக்காக‌ இந்த குச்சிகளைளையும் தேங்காய் நார்களையும் நீ பொறுக்குவதில் எங்கள் நெஞ்சு பொறுக்குதில்லையே! அட!சட்! நிறுத்து! உன் சக மனிதன் தோலூரிந்து கூடுகளாய் மண்ணின் அடிப்புழுக்களால் அநியாயத்திற்கு தின்னப்பட அழிக்கப்பட்டீருக்கிறானே! உன் நரம்பு கொஞ்சம் கூட‌ குமிழி யிடவில்லையே! இதோ உன் தொண்ணூறு வயதிலும் அதோ சுவரில் மாட்டியிருக்கிறாயே ஆயில் அழுக்கேறிய‌ ஒரு மூளி லிங்கத்தை! அதில் உன் புஷ்ப மெத்தை இருப்பதாக‌ புல்லரித்துக்கொண்டு கிடக்கிறாயே! லொக் லொக் என்று இருமி உன் மார்புக்கூடு துருத்த‌ உன் மனக்கதவுக்குப் பின்னாலும் கூட‌ இந்த மனிதனின் மீது ஆயிர வர்ணம் பூசி அசிங்கம் ஆக்கி வைத்திருக்கிறாயே! நெஞ்சு பொறுக்காமல் துடிக்க‌ அடிப்படையாய் மனித நேய வாசனை வீசும் ஒரு நெஞ்சு கூட இல்லையே"..... அடச் சீ குருவியே கிழவர் தன் கைத்தடியை அந்த சன்னல் மீது வீசினார். ====================================================================



முட்கள்


முட்கள்
    ===================================================================
ருத்ரா.இ.பரமசிவன்



முண்டைக்கண் எண்கள் துருத்திய‌
கடிகார வட்டத்தில்
அது என்னை
குத்தி குத்திப்புண்ணாக்கியது.
ஓரப்பார்வை பார்த்து பார்த்து
காக்கை தன் கூரிய அலகுகளால்
கொத்துவது போல்
என்னக்கிளறியது.
நான் ஒன்றும் காதலிக்காக‌
காத்திருக்கும் தவத்துக்காக‌
இப்படி கழுவேற்றப்படவில்லை.
கிரேக்கர்கள் 
மணற் கடிகையை
கவிழ்த்து கவிழ்த்து வைத்துப்பார்த்து
எத்தனை சாம்ராஜ்யங்களை
மண்ணுக்குள் புதைத்திருப்பார்கள்.
நான் 
குத்தொக்க குத்துக்கு சீர்த்தவிடத்தை
எதிர்பார்த்துக்   காத்திருக்கும்
கொக்கும் அல்ல.
2 நிமிடம் 41 வினாடிகள்
எனும் நீண்ட அனக்கொண்டா பாம்பு
என்னை விழுங்கி
என் கழுத்து வரை வந்து விட்டது.
அப்பப்ப!
எங்கே போய்விட்டாள்
என் இல்லத்தரசி?
பால் பொங்கி கீழே கொட்டிவிடப்போகிறது!
ஜாக்கிரதை!
என்று போய்விட்டாள்.
இன்னும் வரவில்லை.
நானும் கடிகாரவட்டத்தைப்
பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்.
பால் கொதி வர‌
4 நிமிடம் ஆகுமாமே!
சப்பாத்திக்கள்ளியின்
அடர்ந்த முட்காட்டில் கிடக்கிறேன்.
காலத்தின் கூரிய முட்களையா
தினம் தினம் 
என் அன்புக்குரியவள் தாங்குகிறாள்!
ஐயோ ஐயோ..
அதற்குள் நுரை பொங்கி..
ஸ்டவ் எல்லாம் வழிந்து...
அந்த விநாடி முள்ளில் நான்
நார் நாராய் தொங்கிக்கிடக்கிறேன்.

====================================================


பீட்ஸா




பீட்ஸா
==============================================ருத்ரா இ.பரமசிவன்.

எவ்வளவு நேரம் நின்றேன்
இந்த ஒளி மரத்தின் அடியில்?
தெரியவில்லை.
எப்படியும் வருவேன்
என்று சொல்லியிருக்கிறாள்.
பெல்பெப்பர் டொமோடோ ஆலிவ்
டாப்பில்
மணமணக்க அந்த பீட்ஸாவை
ஒரே தட்டில்
இருவரும் ஒரே கடியில்
பாலாடை நூல் இழுத்து
வாய்சுவைக்கும் கற்பனயில்
நேரம் நீட்டித்தது பற்றி
கவலையில்லாமல்
விளக்குக்கம்பத்து
அந்த கூட்டல் குறியில்
கசிகின்ற பால் ஒளியில்
நின்றிருந்தேன்.
சங்கத்தமிழ் பாடல் வரி ஒன்றில்
திளைத்திருந்தேன்.
பாலைவனத்தில்
துளியுண்டு கிடக்கும் நீரை
ஆண் மானும் பெண் மானும்
அது குடிகட்டும் என்று இதுவும்
இது குடிக்கட்டும் என்று அதுவும்
"கள்ளத்தில் ஊச்சும்" காட்சிதான் விரிந்தது.
தண்ணீர் அப்படியே இருந்தது
அவற்றின் கானல் நீர்த்தாகமோ
தீர்ந்து போயிருந்தது.
என் கற்பனை சடக்கென்று நின்றது.
அவள் திடீரென்று காரில்
அவன் முன் வந்தாள்.
ஹேய்! இவர் என் டீம் மேனேஜர்.
பீட்ஸா ஹௌஸ் டின்னருக்கு
கம்பெனியாக என்னை அழைத்தார்.
உனக்கு தகவல் தர முடியவில்லை.
நாங்கள் சாப்பிட்டு விட்டோம்.
உனக்கும் ஒரு பாக்ஸ் வாங்கியிருக்கிறோம்.
ம்ம் ஏறு.ரூமில் சாப்பிடலாம்.
நானும் ம்ம் என்று முனகி
காரில் அழுந்திக்கொண்டேன்.
அவர் ஹாய் என்றார்.
நானும் தான்.
அவர் கார் ஓட்டினார்.
அவர் அப்பார்ட்மென்ட வரைக்கும்
ஓட்டிக்கொண்டு வந்தார்.
அவர் முகத்தைக் கவனித்தேன்.
ஒரு கடுவாய் ஒரு முயல்குட்டியை
குத்திக்கிழித்து முழுங்கிய பிறகும்
வாய்க்கடையில்
முயலின் பிஞ்சு குடல் இழைகள்
பிசிறு தட்டி இருக்குமே
அப்படி இருந்தது.
பீட்சாவை அந்தப்பாடா படுத்தியிருப்பார்?
இறுகிய முகத்துடன் ஆனால்
இனிய குரலில் "பை"
சொல்லிவிட்டு அவர் ரூமுக்குப்போனார்.
அங்கே நிறுத்தியிருந்த
எங்கள் காரில் எங்கள் ரூமுக்கு
அந்த பீட்ஸா பாக்ஸுடன்
வந்து சேர்ந்தோம்.
அதே பெல் பெப்பர் டொமொட்டோ ஆலிவ்
டாப்பில் பீட்ஸா ஆவி பறக்க‌
எங்கள் சாப்பாட்டுக்கு தயார் ஆனது.
பீட்ஸாவை
ஒரே கடியில் ஒரே வாயில்
பாலாடை பிசினை இழுத்து இழுத்து
சாப்பிட்டோம்.
இல்லை.இல்லை
"கள்ளத்தில் ஊச்சும்" மான்களைப்போல‌
அந்த வெள்ளை நூல்களை
இழுத்து இழுத்து சுவைப்பதாக‌
"கள்ளத்தில் ஊச்சினோம்"
பசியில்லாமலேயே பசித்த‌து போல‌
அவள் புசித்தாள்.
பசியிருந்தும் பசியில்லாமல்
நான் புசித்தேன்.

===========================================================

Tuesday, November 25, 2014

கொள்ளைச்சிரிப்பு

2014-07-08_09-38-36_208.jpg



கொள்ளைச்சிரிப்பு
==================================================ருத்ரா


வெள்ளைச்சிரிப்பா?
கொள்ளைச்சிரிப்பா?
அன்றொரு நாள் நான்
சிறைப்பட்டுப்போனேன்.
மறுபடியும்
அதற்கு
உன் காதலின்
ஏழு மலை ஏழு கடல் எல்லாம் தாண்டி
"மாங்கல்யம் தந்துநானே" எனும்
தீவுக்குள் வந்து தேடுகின்றேன்.
உப்பு புளி மிளகாய்களின்
அஞ்சறைப்பெட்டிக்குள்ளா
வைத்திருந்தாய்?
தெரியவில்லை!
மழலை நந்தவனத்துள்
அது புதைந்தே போனது.
எத்தனை பாம்புகள்?
எத்தனை சட்டைகள் உரித்தன?
இன்னும்
நான் அதைப்பார்க்க வில்லையே.
வெள்ளிவிழுதுகள்
மண்டிய வயதுகளின்
ஆரண்யத்திலும் தேடுகின்றேன்.
எங்கு
அதை புதையல் ஆக்கினாய்?
அந்த உயிர் சுருட்டும் போதை
புகை நெளிவாய்
என்னை
பொல்லாத பாடு படுத்துகிறது?
எப்போது நான்
அதை பார்ப்பது?
வாக்கிங் என்ற புதிய பரிமாணத்தில்
தினம் தினம்
பூங்காற்றின் முகம் வருடித் தேடுகிறேன்.
மைல் கணக்கு பார்த்து
நான் நடந்ததின் நீளத்தை அடுக்கினால்
அந்த நிலாவுக்கே
முத்தம் கொடுத்துவிட்டு
இந்நேரம் திரும்பியிருக்கலாம்..
அதோ
அங்கே தெரிகிறதே.
சட்...
"என்னா பெரிசு ..பாத்துப்போ"
அவன் அடித்துப்போட்டுவிட்டு
பைக்கில் விரைந்து விட்டான்.
தடுமாறி விழுந்து
கல்லில் அடிபட்டு...
ஆகா! இனிமை !இனிமை!
பார்த்துவிட்டேன்....ரத்தம் வழிய ...
அந்த பூக்களின் மீது விழுந்து கிடக்கிறேன்.
அந்த வெள்ளைச்சிரிப்பு இங்கேயா இருக்கிறது!
ஆனாலும் சிவப்பாய் சிரிக்கிறதே..
சாலையோரத்தில் எனக்கு விழுந்தது
முற்றுப்புள்ளியா? வியத்தல் குறியா?
கால சமுத்திரத்தின்
அடி ஆழத்தில் நான்..

"ஸ்கல் இஞ்சுரி..ஒன்றும் சொல்ல முடியாது"
டாக்டர் ஸ்டெத்தை சுருட்டி
பைக்குள் திணித்தார்.
கேவல்களின் காட்டுக்குள் நீ!
எப்போது  உன் முகத்தில்
நான்
அந்த வெள்ளைப்பூக்களை பார்ப்பது?

========================================================