ராமன் எத்தனை ராமனடி !
=====================================================================
ருத்ரா இ.பரமசிவன்
துப்பாக்கிகளை கொண்டு விவசாயம்
செய்து விடலாம் என்று
மூளை முறிந்தவர்கள்
அறுவடை செய்ததெல்லாம்
நொறுங்கிய கட்டிடங்களும் நசுங்கிய பிணங்களும் தான்.
மனிதத்தின் குரல்
எந்த துப்பாக்கி ரவைகளாலும்
தூளாக்க முடியாதது.
தேச பிதாவே
நூற்றிஐம்பது ஆண்டுகளை நோக்கி நடக்கும்
உன் கைத்தடி ஊன்றிய
தடங்களின் ஒலிகள்
எங்கள் இதயங்களில் தட தட வென்று
கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றன.
சுதந்திரமும் ஜனநாயகமும்
இங்கே
குத்தாட்டம் போ டும் சினிமாக்களாய்
ஒளியை
எங்கோ தொலைத்த
நிழலைத் துரத்திக்கொஂண்டு
ஓடிக்கொண்டிருக்கின்றன.
வெள்ளைக்காரனிடம் ஒட்டு ப்பெட்டியைத்தானே
வாங்கிக்கொடுத்தாய் !
இன்னமும்
இவர்கள் இதில் குப்பையைத்தான்
கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
பணபொருளாதாரத்தின்
காகிதக்காடுகளில்
சாதிமதப் பேயாட்டங்களும்
"பிளாக்ஸ் போர்டுகள்"கொண்டு கோட்டை கட்டி
ஆண்டு கொண்டிருக்கின்றன .
குண்டுகளை
மார்பில் ஏந்தியும்
உன் சர்வோதயக்கனவை நினைத்து தானே
ஹே ! ராம் !
என்றாய்.
அன்று அந்த ரத்தச்சிவப்பின் அந்தியில்
உன்னில் உன்னைத்
தந்தவனைக்கூப்பிட்டாயா?
உன்னைக்
கொன்றவனைக் கூப்பிட்டாயா?
==============================================================